கிழக்கு கொங்கோவில் எரிமலை வெடித்துச் சிதறியதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31ஆக உயர்ந்துள்ளது.
அத்துடன், பெரியவர்களில் 40 பேரை காணவில்லை எனவும் 170 குழந்தைகள் காணாமல் போயிருக்க கூடும் எனவும் ஐ.நா. குழந்தைகள் நிதி அமைப்பு அச்சம் தெரிவித்துள்ளது.
மேலும், பொதுமக்கள் தப்பியோடியதில் 150க்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்களது குடும்பத்தினரிடம் இருந்து பிரிந்து சென்றுள்ளனர். 20 ஆயிரம் பேர் வீடுகளை இழந்துள்ளனர்.
கோமா நகர் அருகே உள்ள நைராகோங்கோ எரிமலை தற்போது கொதித்தெழும்பியுள்ளதால், கடந்த சில நாட்களாகவே பாதிப்பு அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.
எரிமலை குழம்பு விமான நிலையம் ஒன்றிற்கு 300 மீட்டர் தொலைவு வரை பரவி நிற்பதால், குறித்த விமான நிலையம் மூடப்பட்டது. மூன்று கிராமங்கள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளன.
2 கி.மீ. தொலைவுக்கு வீதியில் எரிமலை குழம்புகள் பரவியதனால், மக்களுக்கு உணவு கொண்டு செல்லும் முக்கிய பாதை தடைப்பட்டது. இதனால், 5 இலட்சம் பேர் நீர் மற்றும் மின் இணைப்பு இன்றி தவிக்கின்றனர்.
கடந்த 2002ஆம் ஆண்டு எரிமலை வெடித்ததில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 100,000க்கும் மேற்பட்ட மக்கள் வீடற்ற நிலையில் இருந்தனர்.