மனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றின் தோற்றம் எங்கே என்பதைக் கண்டறிய, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உளவு அமைப்புகளுக்கு 90 நாட்கள் காலக்கெடு விதித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘கொரோனா வைரஸின் தோற்றம் தொடர்பான உறுதியான முடிவுக்கு வரத்தக்க வகையில், தகவல்களை சேகரித்து, ஆய்வு செய்வதற்கான முயற்சிகளை இரட்டிப்பாக்குங்கள்’ என கூறியுள்ளார்.’
கொவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் 2019ஆம் ஆண்டின் கடைசி பகுதியில் சீனாவின் வூஹான் நகரில் கண்டுபிடிக்கப்பட்டது.
முதலில் இந்த வைரஸ் அந்த நகரத்தின் விலங்கு உணவுச்சந்தையில் இருந்து பரவியதாக கூறப்பட்டது. பின்னர் வூஹான் ஆய்வுக்கூடத்தில் (வைராலஜி நிறுவனம்) இருந்து கசிய விடப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
இது தொடர்பாக அமெரிக்க முந்தைய ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் பரபரப்பு குற்றச்சாட்டுகளை சுமத்தினார். எனினும், கொரோனா தோன்றியது எங்கே என்பது பற்றி ஆதாரப்பூர்வமான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
இந்த நிலையில், அமெரிக்க உளவு வட்டாரங்களை மேற்கோள் காட்டி வெளிவந்த சமீபத்திய தகவல்களின்படி, சீனாவில் முதலாவதாக புதிய வைரஸ் கண்டறியப்பட்டதை அந்நாடு ஏற்றுக் கொள்ளும் முன்பே, 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம், மூன்று பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதை வூஹானின் வைரலாஜி நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.