கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலையில் மட்டக்களப்பில் மாத்திரம் 1199 பேர், வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அம்மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் கே.கருணாகரன் மேலும் கூறியுள்ளதாவது, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள கிராம சேவையாளர் பிரிவுகளில் 2 கிராம சேவையாளர் பிரிவுகளை விடுவிக்குமாறு தேசிய கொவிட் செயலணிக்கு சிபாரிசு செய்துள்ளோம்.
மேலும் நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடுகளை முழுமையாக கடைப்பிடிப்பதன் ஊடாகவே வைரஸ் தொற்றினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும்.
ஆகவே, இவ்விடயத்தில் மக்கள் அனைவரும், பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.