சிங்கப்பூரில் பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசிகளைச் செலுத்த அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
சிங்கப்பூரில் கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவிற்கு, கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்று தீவிரமடைந்துள்ளதன் பின்னணியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தொற்று தீவிரம் காரணமாக அங்குள்ள பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
இதுகுறித்து சிங்கப்பூர் வெளியுறவுத் துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் கூறுகையில், ‘நாங்கள் பாடசாலை மாணவர்களுக்கும் கொரோனா தடுப்பூசிகளைச் செலுத்த முடிவு செய்துள்ளோம். இதனைத் தொடர்ந்து அனைத்து வயதினருக்கும் கொரோனா தடுப்பூசிகளைச் செலுத்த இருக்கிறோம்.
எதிர்வரும் ஒகஸ்ட் மாதத்துக்குள் சிங்கப்பூர் மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியின் ஒரு அளவையாவது செலுத்திவிட இருக்கிறோம்’ என கூறினார்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்டுள்ள 105ஆவது நாடாக விளங்கும் சிங்கப்பூரில் இதுவரை மொத்தமாக 61,970பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 32பேர் உயிரிழந்துள்ளனர்.