மட்டக்களப்பில் தனிமைப்படுத்தப்பட்டு முடக்கப்பட்ட சின்ன ஊறணி கிராமசேவகர் பிரிவை நாளை(வியாழக்கிழமை) திறப்பதற்கு தேசிய கொரோனா தடுப்பு செயலணிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மட்டக்களப்பு – மண்முணை வடக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பாலைமீன்மடு, கல்லடிவேலூர், திருச்செந்தூர், சின்ன ஊறணி, நொச்சிமுனை ஆகிய 5 கிராமசேவகர் பிரிவுகள் கடந்த 14 திகதி முதல் தனிமைப்படுத்தப்பட்டு முடக்கப்பட்டது.
இதில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை பாலைமீன்மடு, கல்லடிவேலூர், திருச்செந்தூர், ஆகிய 3 கிராமசேவகர் பிரிவுகள் திறக்கப்பட்டன.
இந்த நிலையில் சின்ன ஊறணி கிராமசேவகர் பிரிவை நாளை திறப்பதற்காக தேசிய கொரோனா தடுப்பு செயலணிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.