பிரித்தானியாவிலிருந்து வடக்கு அயர்லாந்துக்கு பொருட்கள் ஏற்றுமதி செய்வதில் இரு தரப்புக்கும் இடையே எழுந்துள்ள பிரச்னைகளைத் தீர்ப்பதற்காக வட அயர்லாந்துக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை, ஒப்பந்தம் எதுவும் ஏற்படாமல் முடிவடைந்தது.
பிரெக்ஸிட்டுக்குப் பின் வட அயர்லாந்துடனான பிரித்தானியாவின் வர்த்தகம் தொடர்பாக எழுந்துள்ள பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதற்காக நேற்று (புதன்கிழமை) லண்டனில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதில் பிரித்தானியாவின் பிரெக்ஸிட் விவகார அமைச்சர் டேவிட் ஃபிராஸ்ட் மற்றும் ஐரோப்பிய ஆணைய துணைத் தலைவர் மரோஸ் செஃப்கோவிக் தலைமையில் பேச்சுவார்தை முன்னெடுக்கப்பட்டது.
நான்கு மணித்தியாலங்கள் முன்னெடுக்கப்பட்ட இந்த பேச்சுவார்த்தையில், இரு தரப்பினருக்கும் இடையே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. இதையடுத்து, எந்த உடன்பாடும் இல்லாமல் பேச்சுவார்த்தை முடிவடைந்தது.
இதுகுறித்து பிரித்தானியாவின் பிரெக்ஸிட் விவகார அமைச்சர் டேவிட் ஃபிராஸ்ட் கூறுகையில், ‘வடக்கு அயர்லாந்து விவகாரத்தில் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையில் எந்த திருப்புமுனையும் ஏற்படவில்லை. அதே நேரம், பேச்சுவார்த்தை முறிந்துபோகவும் இல்லை.
பேச்சுவார்த்தையின்போது ஐரோப்பிய ஆணையத் தலைவர் மரோஸ் செஃப்கோவிக் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் ஆலோசனை நடத்தினார். திருப்புமுனை ஏற்படும் வரை பேச்சுவார்த்தையைத் தொடர்வது என இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டுள்ளோம்.
ஏற்றுமதி விவகாரத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் விதிமுறைகள் வடக்கு அயர்லாந்தில் அமுல்படுத்தும் விதத்தையும் அதனால் அந்தப் பகுதியில் ஏற்படும் பாதிப்புகளையும் நாங்கள் எதிர்த்து வருகிறோம். இந்தப் பிரச்னையை பேச்சுவார்த்தையின்போது வெளிப்படையாக முன்வைத்தோம்’ என கூறினார்.