அமெரிக்காவின் பெரும் செல்வந்தர்கள் பல ஆண்டுகள் எந்தவித வரியும் செலுத்தாமல் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக நியூயோர்க்கை நகரை தலைமையிடமாக கொண்டு இயங்கும் லாப நோக்கமற்ற புலனாய்வு பத்திரிகையான ‘புரோபப்ளிகா’ செய்தி வெளியிட்டுள்ளது.
பன்னாட்டு நிறுவனங்களுக்கு குறைந்த பட்சம் 15 சதவீதம் வரி விதிக்க ஜி-7 நாடுகள் ஒப்புதல் அளித்த சில நாட்களுக்கு பிறகு, இந்த செய்தி வெளியாகியுள்ளது.
இதில் அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் ஜெப் பெசோஸ், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் எலன் மாஸ்க், தொழிலதிபரும் நியூயோர்க் நகரின் முன்னாள் மேயருமான மைக் புளூம்பெர்க், பிரபல முதலீட்டாளர் வாரன் பபெட் போன்றோரும் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக கூறப்பட்டுள்ளது.
இதன்படி அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ், 2007ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை வருமான வரியை செலுத்தவில்லை என்றும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலன் மாஸ்க் 2018ஆம் ஆண்டு முழுவதும் வருமான வரி செலுத்தவில்லை என கூறப்படுகின்றது.
புரோபப்ளிகா வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், ’25 பணக்கார அமெரிக்கர்கள் தங்களின் மிகப்பெரிய சொத்துடன் ஒப்பிடுகையில் வருமான வரியை மிகக்குறைவாகவே செலுத்துகின்றனர். மொத்த வருமானத்தில் சராசரியாக 15.8 சதவீதத்துக்கும் குறைவாகவே வரி செலுத்துகிறார்கள். சில சமயங்களில் எதுவும் செலுத்துவதில்லை’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
போர்ப்ஸ் பத்திரிக்கையின் தரவுகளை பயன்படுத்தி இந்த அறிக்கையை தயார் செய்ததாக கூறும் ‘புரோபப்ளிகா’, 2014 முதல் 2018 வரையிலான காலகட்டத்தில் 25 பணக்கார அமெரிக்கர்களின் சொத்து மதிப்பு 401 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்ததாகவும், ஆனால் அவர்கள் அந்த ஆண்டுகளில் வெறும் 13.6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மட்டுமே வரி செலுத்தியதாகவும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.