மன்னார்- வங்காலை கடற்கரை ஓரங்களில், இந்திய மருத்துவ கழிவுப் பொருட்கள் கரையொதுங்கியுள்ளதாக அம்மாவட்ட கடற்றொழில் பரிசோதகர் என்.பவநிதி தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “வங்காலை கடற்கரை ஓரங்களில் கரையொதுங்கியுள்ள மருத்துவ கழிவுப் பொருட்களுக்கும் கொழும்பில் மூழ்கடிக்கப்பட்ட கப்பலில் இருந்து வெளி வரும் கழிவுப் பொருட்களுக்கும் எவ்வித சம்மந்தமும் கிடையாது.
மேலும் கரையொதுங்கியுள்ள மருத்துவ கழிவுப் பொருட்களை கடற்கரை தூய்மையாக்கள் பிரிவினர் நேற்று நேரில் சென்று பார்வையிட்டனர்.
இவை இந்தியாவின் மருத்துவ கழிவு பொருட்கள் என்பதனையும் அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அதாவது இந்தியாவில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிக மழை பெய்து வருகின்றமையினால் இவ்வாறான கழிவு பொருட்கள் மன்னார் மாவட்ட கடற் கரையயோரங்களில் கரையொதுங்குகிறது.
ஆகவே இவ்விடயத்தில் மீனவர்கள் அச்சம் அடையத் தேவையில்லை” என அவர் குறிப்பிட்டுள்ளார்.