பயணத்தடையினால் பாதிக்கப்பட்டுள்ள வறுமைக்கோட்டிலுள்ள 5000 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மன்னார். வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னி தேர்தல் தொகுதியிலுள்ள 5000 குடும்பங்களுக்கான நிவாரணப் பொதிகள் வழங்கும் பணிகள், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனினால் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதில் பயணத்தடையினால் தொழில் வாய்ப்பினை இழந்த குடும்பங்கள், பெண் தலைமைத்துவ குடும்பங்கள் மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்கள் ஆகியவற்றுக்கே இந்த நிவாரணப் பொதிகளை வழங்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதேவேளை வவுனியாவில் நிவாரணப் பொதிகள் வழங்கும் செயற்பாட்டினை, தமிழீழ விடுதலை இயக்கத்தின் வவுனியா உதவி மாவட்ட அமைப்பாளர் ராஜனிடம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் நேற்று கையளித்தார்.
புலம்பெயர் தேசத்தில் வசிக்கும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஆதரவாளரான வி.யோகநாதனின் நிதிப் பங்களிப்பில் இந்த நிவாரணம் பொதிகள் வழங்கும் நிகழ்வு இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.