2020ஆம் ஆண்டு யு.இ.எஃப்.ஏ யூரோ கிண்ண கால்பந்து தொடர், தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
அந்த வகையில் உள்ளூர் நேரப்படி இன்று (செவ்வாய்க்கிழமை) குழுநிலைப் போட்டிகளின் மூன்றாம் கட்ட போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகளின் முடிவுகளை பார்க்கலாம்.
பார்க்கென் விளையாட்டரங்கில் நடைபெற்ற போட்டியில், ரஷ்யா அணியும் டென்மார்க் அணியும் பலப்பரீட்சை நடத்தின.
குழு ‘பி’ பிரிவில் நடைபெற்ற இப்போட்டியில், டென்மார்க் அணி 4-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது.
இதில் டென்மார்க் அணி சார்பில், மிக்கேல் டேம்ஸ்கார்ட் 38ஆவது நிமிடத்தில் ஒரு கோலும், யூசப் போல்சன் 59ஆவது நிமிடத்தில் ஒரு கோலும், ஹென்ரியஸ் கிறிஸ்டன்சென் 79ஆவது நிமிடத்தில் ஒரு கோலும் ஜோகீம் 82ஆவது நிமிடத்தில் ஒரு கோலும் அடித்தனர்.
ரஷ்யா அணி சார்பில், ஆர்டெம் ட்சையுபா 70ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி ஒரு கோல் அடித்தார்.
க்ரெஸ்டோவ்ஸ்கி விளையாட்டரங்கில் நடைபெற்ற போட்டியில், பின்லாந்து அணியும் பெல்ஜியம் அணியும் மோதின.
குழு ‘பி’ பிரிவில் நடைபெற்ற இப்போட்டியில், பெல்ஜியம் அணி 2-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது.
இதில் பின்லாந்து அணியின் வீரரான லூகாஸ் ஹிரடெக்கி போட்டியின் 74ஆவது நிமிடத்தில் பெல்ஜியம் அணிக்காக ஓன் கோல் அடித்து கொடுத்தார். ரொமேலு லுக்காக்கு 81ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.