பசில் ராஜபக்ஷவின் நாடாளுமன்ற வருகையானது அரசாங்கத்தின் பொருளாதார நடவடிக்கைகளுக்கு பக்கபலமாக அமையும் என இராஜாங்க அமைச்சர் ஜனக்க வக்கும்புர தெரிவித்துள்ளர்.
இந்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்த அவர், “பசில் ராஜபக்ஷ நாடாளுமன்றிற்கு வருகை தருவதால் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும் என நாம் கூறவில்லை. ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கத்தின் பொருளாதார நடவடிக்கைளுக்கு அவரின் வருகை உதவியாக அமையும்.
பொருளாதாரம், மற்றும் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர். அவரின் அனுபவம் தொடர்பாக அனைவரும் அறிவார்கள். சில நேரங்களில் அரசாங்கம் மாற்றப்படுகின்றது.
நாட்டு மக்களின் தேவையை அடிப்படையாக கொண்டே மாற்றப்படுகிறது. அது போலவே அமைச்சுக்களும் மாற்றப்படுகிறது.
நாடாளுமன்றத்திற்கு வருகை தந்து அமைச்சு பொறுப்பொன்றினை பெற்றுக்கொள்ளுமாறு ஆரம்பத்திலிருந்தே கூறினோம். ஆனால் அவர் வரவில்லை.” என கூறினார்.
இதேவேளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுமார் 40 பேர் நாடாளுமன்ற உறுப்பினர் பிரமித்த பண்டாரவின் இல்லத்தில் விசேட சந்திப்பொன்றை நடத்தினர்.
இதன்போது பசில் ராஜபக்ஷ நாடாளுமன்றம் வர வேண்டும் என்றும் நிதி மற்றும் பொருளாதார அமைச்சராக நியமிக்கப்பட வேண்டும் என்றும் தீர்மானித்திருந்தனர்.