எமது இனத்தையும் மண்ணையும் காப்பதற்கான ஒற்றுமை வலுவாக வேண்டும். அதற்கு எந்தவிதமான விட்டுக்கொடுப்பினையும் செய்வதற்கு தமிழீழ விடுதலை இயக்கம் தயாராக இருக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் செல்வம் அடைக்கலநாதன் மேலும் கூறியுள்ளதாவது, “வடக்கு, கிழக்கிலுள்ள நிலங்களை அபகரித்து பூர்வீகத்தை சிதைக்கும் செயற்பாட்டை அரசாங்கம் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது.
இவ்விடயத்திற்கு எதிராக எந்ததொரு நடவடிக்கையும் முன்னெடுக்கவில்லை என்றால் இராணுவ அடக்குமுறையினூடாக எமது தேசத்தின் வரலாற்றை சிதைக்கும் செயற்பாட்டினை அவர்கள் செய்து முடிப்பார்கள்.
இதற்கு அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு முன்வர வேண்டும். அந்த ஒற்றுமையினை வலியுறுத்தி சில கட்சிகளிற்கு ஒரு கடிதத்தை அனுப்பியிருந்தோம்.
அதற்கு மாவை சேனாதிராஜா மற்றும் சித்தார்த்தன் ஆகியோர் தமது ஆதரவினை தெரிவித்திருந்தனர்.
மேலும் சுரேஸ் பிரேமச்சந்திரன், விக்னேஸ்வரன் ஆகியோர் தமது ஆர்வத்தினை தெரிவித்திருந்தாலும் கூட வேறு சிலரையும் உள்வாங்கவேண்டும் என்ற கோரிக்கையினையும் முன்வைத்திருக்கின்றார்கள்.
குறித்த விடயத்தில் எந்தக் கட்சியினை சார்ந்தவர்கள் என்பதனை நாம் பார்க்கவில்லை. விடுபட்டவர்கள் அழைக்கப்படவேண்டும் என்பதில் நாம் ஆர்வமாக இருக்கிறோம்.
எமது இனத்தையும் மண்ணையும் காப்பதற்கான ஒற்றுமை வலுவாகவேண்டும். அதற்கு தமிழீழ விடுதலை இயக்கம் எந்தவிதமான விட்டுக்கொடுப்பினையும் செய்வதற்கு தயாராக இருக்கின்றது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.