தங்களது அணுசக்தி மையங்களின் படங்களை ஐ.நா.வின் சர்வதேச அணுசக்தி கண்காணிப்பு அமைப்பிடம் (ஐ.ஏ.இ.ஏ.) ஒப்படைக்க முடியாது என்று ஈரான் அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஈரான் நாடாளுமன்ற அவைத் தலைவர் முகமது பக்கீர் காலிபாஃப் கூறுகையில்,
‘அணுசக்தி மையங்களின் உள்ளே எடுக்கப்படும் படங்களை ஐ.ஏ.இ.ஏ-வுடன் பகிர்ந்துகொள்வதற்கான ஒப்பந்தம் காலாவதியாகிவிட்டது.
எனவே, இனி அத்தகைய படங்கள் எதுவும் அந்த அமைப்பிடம் வழங்கப்படாது. அந்தப் படங்களை ஈரானே கைவசம் வைத்திருக்கும்’ என கூறினார்.
இதற்கிடையே, ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா தளர்த்தாவிட்டால் தங்களது அணுசக்தி மையங்களுக்குள் ஐ.ஏ.இ.ஏ. பொருத்தியுள்ள கண்காணிப்பு கெமராக்கள் அகற்றப்படும் என்று தேசிய பாதுகாப்பு மற்றும் வெளி விவகாரங்களுக்கான நாடாளுமன்றக் குழு செய்தித் தொடர்பாளர் ஒருவர் எச்சரித்ததாக ‘டெஹ்ரான் டைம்ஸ்’ நாளிதழ் தெரிவித்துள்ளது.
கடுமையான நிலைப்பாட்டைக் கொண்ட தலைமை நீதிபதி இப்ராஹிம் ரய்சி புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்த அறிவிப்பானது அந்த நாட்டுக்கும் வல்லசு நாடுகளுக்கும் இடையிலான அணுசக்தி ஒப்பந்தத்தைத் தக்கவைப்பதற்கான முயற்சியில் மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானுக்கும் அமெரிக்கா உள்ளிட்ட ஐ.நா. பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பு நாடுகள் மற்றும் ஜேர்மனிக்கும் இடையே கடந்த 2015ஆம் ஆண்டில் கையெழுத்தான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து ஈரான் விலகியுள்ள நிலையில், இந்த ஒப்பந்தத்தைப் பாதுகாப்பதற்கான பேச்சுவார்த்தை தற்போது வியன்னாவில் நடைபெற்று வருகிறது.