ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ஈரான் ஆதரவு தீவிரவாத குழுக்களை இலக்கு வைத்து, அமெரிக்கா வான் தாக்குதல் நடத்தி வருவதாக அந்நாட்டின் பாதுகாப்புத்துறை தலைமையகமான பென்டகன் அறிவித்துள்ளது.
சமீபத்திய மாதங்களில் ஈராக்கில் முகாமிட்டுள்ள அமெரிக்க படையினரின் தளங்களை இலக்கு வைத்து பல்வேறு ஆளில்லா விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதற்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்படுவதாக பென்டகன் தெரிவித்துள்ளது.
இதற்கமைய அந்த நாடுகளில் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதற்காக பயன்படுத்தப்படும் வளாகங்கள், ஆயுத கிடங்குகளை இலக்கு வைத்து இந்த தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதுதொடர்பாக பென்டகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பாதுகாப்பு காரணங்களுக்காக நடத்தப்பட்ட துல்லியமான வான் தாக்குதல்களின் மூலம் சிரியாவில் இரண்டு இலக்குகளும் ஈராக்கில் ஒரு இலக்கும் குறி வைக்கப்பட்டது.
கதாய்ப் ஹெஸல்போலா, கதாய்ப் சய்யீத் அல் ஹூதா ஆகிய ஈரானிய இராணுவ ஆதரவு பெற்ற தீவிரவாத குழுக்கள், இலக்கு வைக்கப்பட்ட இடங்களில் ஆயுதங்களை குவித்து வைத்திருந்தது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈராக்கில் ஜிஹாதிகள் இஸ்லாமியவாத நாடு என தங்களை அழைத்துக் கொள்ளும் ஐ.எஸ் குழுவுக்கு எதிராக போரிடும் சர்வதேச கூட்டுப்படையின் அங்கமாக 2,500 அமெரிக்க துருப்புகள் முகாமிட்டுள்ளன.