ஜம்மு- காஷ்மீர் லைட் காலாட்படையில் இருந்த 600க்கும் மேற்பட்ட இளம் பணியாளர்கள், இராணுவ வீரர்களாக நியமனம் பெற்றனர்.
ஜம்மு காஷ்மீர் லைட் காலாட்படை மையத்தின் பனா சிங் பரேட் மைதானத்தில் நடைபெற்ற குறித்த நிகழ்வில், ஒரு வருட காலம், கடுமையான பயிற்சியினை நிறைவு செய்த அவர்களுக்கு இராணுவ வீரர்களாக பட்டமளிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டன.
இதன்போது சான்றளிப்பு அணிவகுப்பு, 15 படைப்பிரிவுகளின் கட்டளைத் தளபதி லெப்டினென்ட் ஜெனரல் டி.பி.பாண்டேவினால் மதிப்பாய்வு செய்யப்பட்டது.
ஜம்மு- காஷ்மீரின் பல்வேறு பிராந்தியங்கள் மற்றும் மதங்களைச் சேர்ந்த இளம் வீரர்கள் ஒற்றுமையாக அணிவகுத்து, தங்களது ரெஜிமென்ட் பாடலான ‘பாலிதனம் வீர் லக்ஷணம்’ பாடினர்.
அதன்பின்னர் தேசிய கீதம் இசைக்கும்போது வீரர்கள் மூவர்ணத்திற்கு மரியாதை செலுத்தினர்.
இந்திய இராணுவத்தின் சினார் கார்ப்ஸின் கட்டளைத் தளபதி லெப்டினென்ட் ஜெனரல் டி.பி.பாண்டே, இளம் வீரர்களின் அணிவகுப்புக்கு வாழ்த்துக்களை தெரிவித்ததோடு, தேசத்திற்கு தன்னலமற்ற சேவையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
ஜம்மு- காஷ்மீரிலுள்ள அதிகளவான இளைஞர்கள் பாதுகாப்பு படையில் இணைவதற்கு அவர்களை ஊக்கப்படுத்துபவர்களின் பங்களிப்பையும் பாராட்டினார்.
மேலும் இந்த உன்னதமான தொழிலில் இளைஞர்கள் இணைவதற்கு அவர்களது பெற்றோர்கள் ஆற்றிய முக்கிய பங்கையும் எடுத்துரைத்தார்.
இதேவேளை பயிற்சியில் வெவ்வேறு அம்சங்களில் சிறந்து விளங்கிய இளம் வீரர்களை, மறு ஆய்வும் செய்யும் அதிகாரி பாராடினார்.
இதன்போது அனைத்து செயற்பாடுகளிலும் சிறந்த திறனை வெளிப்படுத்திய புதிய இராணுவ வீரரான சாஹில் குமாருக்கு, ஷெர்-இ-காஷ்மீர் மரியாதைக்குரிய வாள் மற்றும் திரிவேனி சிங் பதக்கம் ஆகியன வழங்கப்பட்டன.
அதேபோன்று துப்பாக்கிச் சூட்டில் சிறந்தவர் என்பதற்காக செவாங் ரிஞ்சன் பதக்கம் புதிய இராணுவ வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ள இர்ஷாத் அஹ்மத் தார்க்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது