ஆப்கானிஸ்தான் நாட்டின் 85 சதவீதப் பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துவிட்டதாக, தலிபான்கள் அறிவித்துள்ளனர்.
எனினும், இந்த கருத்தினை ஆப்கானிஸ்தான் அரசாங்கம் மறுத்துள்ளது. இந்தக் கூற்றை சுயாதீனமாக சரிபார்க்க முடியவில்லை.
நாட்டின் 400 மாவட்டங்களில் மூன்றில் ஒரு பங்கை தலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்கொண்டு வந்துவிட்டதாக பிற மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
நாட்டின் மேற்குப் பகுதியில் ஈரான் எல்லைப் புறத்தில் தொடங்கி, நாட்டின் மறுபுறத்தில் சீன எல்லைப் புறம் வரை ஒரு வளைகோடு போல இந்த தலிபான் கட்டுப்பாட்டு பகுதி பரவியிருக்கிறது.
ஹெராட் மாகாணத்தில் 5 மாவட்டங்களை சண்டை இல்லாமலேயே தலிபான்கள் கைப்பற்றிவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனிடையே ஆப்கானிஸ்தான் – தஜிகிஸ்தான் எல்லையில் மூன்றில் ஒரு பங்கு தூரத்தை தலிபான்கள் சடுதியில் கைப்பற்றிக்கொண்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
அதேவேளை தலிபான்கள் 6 மாதத்தில் ஆப்கானிஸ்தான் நாட்டை முழுமையாக கைப்பற்றிவிடுவார்கள் என்று சில அமெரிக்க உளவுத்துறை ஆய்வாளர்கள் கூறுவதாக ஜூன் மாதம் அதிகாரிகளுக்கு அளிக்கப்பட்ட ஒரு மதிப்பீடு தெரிவிக்கிறது.
இந்தநிலையில், ஈரான் அருகே உள்ள இஸ்லாம் குவாலா, துர்க்மெனிஸ்தான் அருகே உள்ள தொர்குண்டி ஆகிய எல்லையோர நகரங்களை தாங்கள் கைப்பற்றிவிட்டதாக தலிபான்கள் கூறுகின்றனர்.
இஸ்லாம் குவாலா எல்லைப் பகுதி ஆப்கானிஸ்தான் – ஈரான் இடையிலான மிகப் பெரிய வணிக நுழைவாயில். இந்த எல்லை வழியாக நடைபெறும் வணிகத்தின் மூலம் ஆப்கான் அரசாங்கத்துக்கு மாதம் 2 கோடி அமெரிக்க டொலர்களுக்கு நிகரான வருமானம் வரும்.
அதைப் போலவே தொர்குண்டி நகரம், துர்க்மெனிஸ்தான் உடனான வணிக நுழைவாயிலாக உள்ளது.
இந்த இரு எல்லைப்புற நகரங்களையும் மீண்டும் கைப்பற்ற ஆப்கான் படைகள் முயற்சி செய்துவருவதாக அந்நாட்டு உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் தாரெக் அரியான் கூறியுள்ளார்.