ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்துவதற்கான அமைதி பேச்சுவார்த்தை நாளை (வெள்ளிக்கிழமை) கட்டார் தலைநகர் டோஹாவில் நடைபெறவுள்ளது.
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படையினர் முழுமையாக வெளியேறி வரும் நிலையில், இந்த அமைதி பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
ஆப்கானிஸ்தான் அரச பிரதிநிதிகளுக்கும் தலிபான் அமைப்பினருக்கும் இடையே நடைபெறவுள்ள இப்பேச்சுவார்த்தையில் ஆப்கான் நல்லிணக்க சபைத் தலைவர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர். இதில், ஆப்கான் முன்னாள் ஜனாதிபதி ஹமீத் கர்சாய் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுமார் 20 ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடைபெற்றுவரும் ஆப்கானிஸ்தானில், அமைதியை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் அண்மைக் கால வன்முறைச் சம்பவங்களால் பின்னடைவைச் சந்தித்துள்ளது.
தற்போது தலிபான்களின் கட்டுப்பாட்டில் எத்தனை மாவட்டங்கள் உள்ளன என்பது குறித்து தெளிவான தகவல் இல்லை. எனினும், அந்த நாட்டின் 421 மாவட்டங்களில் மூன்றில் ஒரு பகுதி தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ளதாகக் கூறப்படுகிறது.