ஆப்கானிஸ்தானில் மூன்று மாத சண்டை நிறுத்தத்துக்கு ஈடாக, சிறை வைக்கப்பட்டிருக்கும் சுமார் ஏழாயிரம் பேரை விடுவிக்க வேண்டும் என தலிபான்கள் நிபந்தனை விதித்துள்ளனர்.
அத்துடன் தற்போது சண்டை நிறுத்தத்துக்கு முன்வந்திருக்கும் தலிபான்கள், வேறொரு முக்கியமான நிபந்தனையையும் விதித்துள்ளனர்.
தங்களது இயக்கத்தின் பெயரை அமெரிக்காவின் தடைப் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என அவர்கள் கோரியுள்ளனர்.
இதனிடையே இது ‘மிகப்பெரிய கோரிக்கை’ என ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தின் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவர் நதீர் நதீரி கூறியுள்ளார். இருப்பினும், இது எவ்வாறு பிரதிபலிக்கும் என்று அரசாங்கம் இதுவரை கூறவில்லை.
கடந்த ஆண்டு இதேபோன்றதொரு சூழலில் சுமார் ஐந்தாயிரம் தலிபான் கைதிகள் சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்டனர். அவர்களில் பலர் தற்போது போர்க்களத்திற்கு திரும்பியதால், பல இடங்களில் வன்முறை அதிகரித்து நாட்டில் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியிருக்கும் நிலையில், கடந்த சில வாரங்களாக தலிபான்களின் கை ஓங்கியிருக்கிறது. பல முக்கியப் பகுதிகளை அவர்கள் கைப்பற்றியுள்ளனர். பல்வேறு இடங்களில் முன்னேறி வருகின்றனர்.
ஆப்கானிஸ்தானின் 85 சதவீதப் பகுதிகளை கைப்பற்றிவிட்டதாக தலிபான்கள் அண்மையில் அறிவித்தனர். ஆயினும் அந்தக் கூற்றையும் கள நிலவரத்தையும் சரி பார்க்க இயலாது.
நாட்டில் மொத்தமுள்ள 400 மாவட்டங்களில் மூன்றில் ஒரு பகுதி தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிட்டதாக சில கணிப்புகள் கூறுகின்றன.