தென்னாபிரிக்காவில் வன்முறை மற்றும் கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை, 117ஆக அதிகரித்துள்ளது.
தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜேக்கப் ஸுமா, சிறையில் அடைக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு ஏழு மாகாணங்களில் குழப்பநிலை நீடித்து வருகின்றது.
இதனால் அங்கு வன்முறை மற்றும் கலவரங்களை கட்டுப்படுத்த பொலிஸாருக்கு உதவியாக 20,000 க்கும் மேற்பட்ட துருப்புக்களை அரசாங்கம் அனுப்பி வைத்துள்ளது.
இதுவரை 2,200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வன்முறையின் மையமான குவாசுலு-நடால் மாகாணத்தில், நிலைமை நிலையற்றதாகவே உள்ளதாகவும் ஆனால் மிகவும் மேம்பட்ட ஸ்திரத்தன்மையை நோக்கி நகர்வதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய அமைதியின்மை, முன்னாள் ஜனாதிபதி ஸூமாவை சிறையில் அடைத்ததன் மூலம் தூண்டப்பட்டது,
முன்னாள் ஜனாதிபதி ஜேக்கப் ஸுமாவுக்கு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அந்த நாட்டின் அரசியல் சாசன நீதிமன்றம், 15 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இதையடுத்து ஜேக்கப் ஸூமாவை கைது செய்ய எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். எனினும், கடந்த வாரம் ஜேக்கப் ஸூமா பொலிஸில் சரணடைந்தார்.
இந்தநிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜேக்கப் ஸூமாவை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது கலவரம் மற்றும் வன்முறையாக உருவெடுத்துள்ளது.