மலையக சிறுமியின் மரணத்திற்கு நியாயம் கிடைக்கும் வரை தொடர்ந்து குரல் கொடுப்போமென வீட்டுப் பணிப்பெண்களுக்காக குரல் கொடுக்கும் அமைப்பான ட்ரொடெக்ட் .அமைப்பின் தலைவி கருப்பையா மைதிலி தெரிவித்துள்ளார்.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, ”சிறுமியின் மரணம் தொடர்பான உண்மை வெளிப்படுத்தப்பட வேண்டும்.
ஆகவே சிறுமியின் மரணத்துக்கு நீதி கிடைக்கும் வரை எமது சங்கம் தொடர்ந்து போராடும். இவ்விடத்துக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்
குறித்த சிறுமி, தரகர் ஒருவர் ஊடாகவே வீட்டு வேலைக்குச் சென்றுள்ளார். சிறாரை எவ்வாறு வேலைக்கு அமர்த்த முடியும்.
அத்துடன் சிறுமியின் மரணம் தொடர்பில் எமக்கு உண்மை தெரிய வரவேண்டும். உண்மையை மூடிமறைக்க எவரும் முயற்சிக்க கூடாது” என அவர் வலியுறுத்தியுள்ளார்.
முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய ரிஷாட் பதியுதினின் இல்லத்திற்கு கடந்த 2020ஆம் ஆண்டு ஒக்டோபரில் டயகம 3ஆம் பிரிவில் இருந்து 15 வயது சிறுமி வீட்டுப் பணிப்பெண்ணாக சென்றுள்ளார்.
கடந்த 3ஆம் திகதி தீக்காயங்களுடன் அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 15ஆம் திகதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
குறித்த சிறுமியின் மரணம் தொடர்பாக அவரது குடும்ப உறுப்பினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.