மேற்கு ஐரோப்பாவில் கடந்த வார கனமழை மற்றும் வெள்ளத்துக்கு ஏறக்குறைய 200பேர் உயிரிழந்துள்ளதோடு நூற்றுக்கணக்கானோரை காணவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக ஜேர்மனியில் குறைந்தது 156பேர் இறந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஜேர்மனியில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகள் ரைன்லேண்ட்-பலட்டினேட் ஆகும். அங்கு பேரழிவுகரமான வெள்ளத்தில் 110பேர் உயிரிழந்தனர் என்று கோப்லென்ஸ் பொலிஸ்துறை மற்றும் ஜேர்மன் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதேவேளை, ஜேர்மனியின் அதிக மக்கள் தொகை கொண்ட, அண்டை மாநிலமான வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா மாநிலத்தில், நான்கு தீயணைப்பு வீரர்கள் உட்பட 46பேர் உயிரிழந்துள்ளனர்.
வெள்ள நீர் வடிந்து, மீட்புப் பணிகள் துரிதமடைந்துள்ள நிலையில், அந்தப் பகுதியில் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
இதனிடையே மேற்கு ஜேர்மனியில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இரண்டு பிராந்தியங்களில் ஒன்றான ரைன்லேண்ட்-பாலாட்டினேட் மாநிலத்தில் உள்ள ஷுல்ட் கிராமத்திற்கு அதிபர் அங்கேலா மேர்க்கெல் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பயணம் செய்தார்.
இதன்போது அங்குள்ள மக்களிடம் உரையாடிய அவர், ‘நாங்கள் உங்கள் பக்கத்திலேயே இருக்கிறோம்,’ என ஆறுதல் கூறினார்.
மேலும், ‘இது அதிர்ச்சியளிக்கிறது. கட்டவிழ்த்து விடப்பட்ட அழிவுக்கு ஜேர்மன் மொழியில் வார்த்தைகள் இல்லை என்று நான் கிட்டத்தட்ட சொல்ல முடியும்’ என கூறினார்.
இதுதவிர கனமழை மற்றும் வெள்ளத்துக்கு பெல்ஜியத்தில் 31பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.