இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 82 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
41 ஆண்களும் 41 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 727ஆக அதிகரித்துள்ளது.
இதேநேரம், கொரோனா தொற்று தோன்றிய இடமாகக் கூறப்படும் சீனாவில் இதுவரையில் கொரோனா தொற்றினால் 4 ஆயிரத்து 636 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், சீனாவைவிடவும் இலங்கையில் அதிக உயிரிழப்புகள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 2 ஆயிரத்து 556 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து 18 ஆயிரத்து 775ஆக அதிகரித்துள்ளது.
அவர்களில் 2 இலட்சத்து 84 ஆயிரத்து 524 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 29 ஆயிரத்து 524 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.