தேவை ஏற்படின் மூன்றாவது டோஸ் தடுப்பூசியை வழங்குவதற்கு இலங்கை தயாராக இருப்பதாக அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.
உலகின் எந்த வைரஸ் மாறுபாட்டிற்கும் எதிரான சிறந்த வழி தடுப்பூசிகள் என குறிப்பிட்ட அவர், இலங்கையில் செலுத்தப்படும் அனைத்து தடுப்பூசிகளும் 95-96% பாதுகாப்பானவை என்றும் குறிப்பிட்டார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், இரண்டாவது தடுப்பூசியைப் பெற்றுக்கொண்ட இரண்டு வாரங்களுக்குப் பின்னர் முழுமையான நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும் என கூறினார்.
அதேநேரம் இதுவரை 30 வயதிற்கு மேற்பட்ட 96 விகிதமானவர்களுக்கு முதலாவது டோஸ் தடுப்பூசியும் 25 விகிதமானவர்களுக்கு முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.
இதேவேளை இந்த மாதத்திற்குள் முதல் டோஸ் பெற்ற அனைவருக்கும் இரண்டாவது டோஸ் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.