வட அமெரிக்க நாடுகளில் ஒன்றான அல்ஜீரியாவில் தீவிரமாக பரவிவரும் காட்டுத்தீயில், இதுவரை 65பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வடக்கு அல்ஜீரியாவின் வனப்பகுதிகளில் தொடர்ந்து இரண்டாவது நாளாக எரிந்துவரும் காட்டுத்தீயானது நாட்டின் வரலாற்றில் மிகவும் அழிவுகரமான காட்டுத்தீயாகும். இதில் உயிரிழந்தவர்களில் 28 இராணுவ வீரர்களும் அடக்கம்.
கைபல் பிராந்தியத்தில் பற்றி ஏரியும் காட்டுத்தீயில் மேலும் 12 இராணுவ வீரர்கள் தீக்காயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தீப்பிடித்த பகுதிகளில் 48 டிகிரி செல்சியஸ் (118 பாரன்ஹீட்டை விட) கடுமையான வெப்ப அலை பதிவாகியுள்ளது. அதே நேரத்தில் கிட்டத்தட்ட 1000 சிவில் பாதுகாப்பு ஊழியர்கள் தீயை எதிர்த்துப் போராடி வருகின்றனர்.
மலைப்பகுதியான கபிலி பகுதியில் மிகக் கடுமையாக எரிந்த தீயை எதிர்த்துப் போராட, அரசாங்கம் இராணுவத்தை நியமித்துள்ளது.
இந்த மிக மோசமான காட்டுத்தீயை தொடர்ந்து ஜனாதிபதி அப்தெல்மட்ஜித் டெபோஃன் மூன்று நாட்கள் தேசிய துக்கமாக அறிவித்தார்.
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், இரண்டு தண்ணீர் வீச்சு விமானங்களை அனுப்புவதாகக் கூறினார். அத்துடன் டுவிட்டரில் ‘அல்ஜீரிய குடிமக்களுக்கு எங்கள் அனைத்து ஆதரவையும் தருவதாக’ உறுதியளித்தார்.
அல்ஜீரியாவின் அரசாங்கம் பின்னர் இரண்டு தீயணைப்பு விமானங்களை வாடகைக்கு எடுப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒரு உடன்பாட்டை எட்டியதாகக் கூறியது.
இன்று (வியாழக்கிழமை) முதல் செயற்படும் இந்த விமானங்கள் கிரேக்கத்தில் தீப்பிழம்புகளைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்பட்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.