பிரித்தானிய குடிமக்கள் வெளியேற உதவுவதற்காக, சுமார் 600 பிரித்தானிய துருப்புக்கள் ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பப்பட உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
நாட்டின் இரண்டாவது பெரிய நகரான கந்தஹார் மற்றும் கஜினி மற்றும் ஹெராத் நகரங்களை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிரித்தானிய நாட்டவர்கள், ஆப்கானிஸ்தான் ஊழியர்கள் மற்றும் மொழிபெயர்ப்பாளர்களை இடமாற்றம் செய்ய இராணுவ வீரர்கள் உதவுவதோடு பாதுகாப்பு அளிப்பார்கள்.
கடந்த வாரம் வெளியுறவு அலுவலகம், அனைத்து பிரித்தானிய நாட்டினரையும் வெளியேறுமாறு அறிவுறுத்தியது. சுமார் 4,000 பிரித்தானிய குடிமக்கள் இன்னும் நாட்டில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாதுகாப்புச் செயலர் பென் வாலஸ் கூறுகையில், ‘பிரித்தானிய நாட்டவர்கள், இராணுவ வீரர்கள் மற்றும் முன்னாள் ஆப்கானிஸ்தான் ஊழியர்களின் பாதுகாப்பே அரசாங்கத்தின் முதல் முன்னுரிமை. அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய எங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும்’ என கூறினார்.
ஆப்கானிஸ்தானுக்கான பிரித்தானிய தூதர் சர் லாரி பிரிஸ்டோ, ஆப்கானிஸ்தானில் உள்ள ஒரு சிறிய குழுவை தொடர்ந்து வழிநடத்துவார். இது காபூலுக்குள் மிகவும் பாதுகாப்பான இடத்திற்கு இடம்பெயரும் என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அத்துடன் பிரித்தானிய நாட்டவர்கள், பிரித்தானியாவின் ஆப்கானிஸ்தான் இடமாற்றங்கள் மற்றும் உதவி கொள்கைக்கு தூதரகம் உதவும், இது ஏற்கனவே 3,100க்கும் மேற்பட்ட (கடந்த சில வாரங்களில் 1,800 உட்பட) முன்னாள் ஆப்கானிஸ்தான் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் பிரித்தானியாவிற்கு செல்ல உதவியது,
இதனிடையே, சிறப்பு விமானங்களில் கணிசமான தூதரக ஊழியர்களை வெளியேற்ற உதவுவதற்காக காபூலில் உள்ள விமான நிலையத்திற்கு 3,000 இராணுவ துருப்புக்களை அனுப்புவதாகவும் அமெரிக்கா கூறியுள்ளது.