ஜம்மு- காஷ்மீர் அரசு, அந்தப் பகுதிகளிலுள்ள அரச பாடசாலைகளுக்கு தியாகிகளின் பெயரை வைக்க தீர்மானம் மேற்கொண்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக ஜம்மு, டோடா, ரியாசி, பூஞ்ச், ரஜோரி, கத்துவா, சம்பா, ரம்பன், கிஷ்த்வார் மற்றும் உதம்பூர் மாவட்டங்களின் துணை ஆணையாளர்களுக்கு, ஜம்முவின் ஆணையாளர் கடிதம் அனுப்பியுள்ளார்.
குறித்த தீர்மானத்தை தியாகிகளின் குடும்பங்கள் மற்றும் உள்ளூர் மக்கள் வரவேற்றுள்ளனர்.
அதாவது கடந்த 2016 இல் தேசத்திற்காக தன் உயிரைத் தியாகம் செய்த B.S.F ஜவான் குர்ணம் சிங்கின் குடும்ப உறுப்பினர்கள், அரசின் இந்த நடவடிக்கையை வரவேற்றனர்.
அரசாங்கம் நல்ல முடிவொன்றை எடுத்துள்ளதாக சிங்கின் தந்தை குறிப்பிட்டுள்ளார்.
இதேபோன்று சர்பஞ்ச் குல்பீர் சவுத்ரி, அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை குழந்தைகளை ஊக்குவிக்கும் என்றும் அவர்கள் பாடசாலைக்கு செல்லும் போது நமது தேசத்தின் தியாகிகள் பற்றி அறிந்து கொள்வார்கள் என்றும் கூறினார்.
இதற்கிடையே, ஜம்மு -காஷ்மீரின் முன்னாள் துணை முதல்வரும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவருமான கவிந்தர் குப்தா, “ஜம்மு- காஷ்மீரில், தீவிரவாதத்தின்போது ஏராளமான பொலிஸார் மற்றும் இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களை கௌரவிக்க எடுக்கப்பட்ட அரசின் இந்த நடவடிக்கை பாராட்டத்தக்கது.
டெல்லி மற்றும் நாட்டின் பிற மாநிலங்களிலிருந்தும் அடிமைத்தனத்தின் அறிகுறிகளை முழுமையாக நாங்கள் அகற்ற வேண்டும்.
இதேவேளை பகத் சிங், சுக்தேவ், ராஜகுரு மற்றும் சந்திரசேகர் ஆசாத் போன்ற தியாகிகளை நாம் கௌரவிக்க வேண்டும். இதனால் நம் வருங்கால சந்ததியினர் அவர்களை எப்போதும் நினைவில் கொள்வார்கள்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.