அச்சத்தின் விளிம்பில் உள்ள மக்கள் என்ன செய்வதறியாது காபூல் விமான நிலையத்தை புடை சூழ்ந்துள்ளதால், விமான நிலையம் மூடப்படுவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
மக்கள் கூட்டம் கட்டுக்குள் வந்ததும் விமான நிலையத்தை திறக்க வாய்ப்புள்ளதாக, அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
அறுபது இலட்சம் மக்கள் வசிக்கும் காபூலை தலிபான்கள் கைப்பற்றியுள்ளதால், அங்கிருந்து வேறு நாடுகளுக்கு தப்பியோட மக்கள் முண்டியடித்துக்கொண்டு அங்குள்ள விமானங்களில் ஏறுகின்றனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே விமான நிலையத்தை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ள அமெரிக்க படையினர், கூட்டத்தை கட்டுப்படுத்த இன்று (திங்கட்கிழமை) துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் இருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
அதே நேரத்தில் வெளிநாட்டுக்கு தப்பி செல்ல முயற்சிக்கும் யாரையும் இதுவரை தலிபான்கள் தடுத்து நிறுத்தவில்லை.
ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள தலிபான்கள் அந்த நாட்டுக்கு புதிய பெயரை சூட்ட முடிவு செய்துள்ளனர். ‘இஸ்லாமிக் எமிரேட் ஒஃப் ஆப்கானிஸ்தான்’ என்று அதற்கு பெயர் சூட்ட இருக்கிறார்கள். புதிய அரசாங்கம் பதவி ஏற்றதும் முறைப்படி இதற்கான அறிவிப்பு வெளியிடப்படும்.