“தலிபான்களிடமிருந்து எனது அழகான மக்களை, குறிப்பாக திரைப்படத் தயாரிப்பாளர்களைப் பாதுகாக்க என்னுடன் இணையுங்கள்” என ஆப்கானிஸ்தனின் திரைப்படத் தயாரிப்பாளர் சஹ்ரா கரிமி திரைப்பட சமூகத்திடம் வேண்டுகோள் விடுத்து ஒரு திறந்த மடலை எழுதியுள்ளார்.
“நான் உடைந்த இதயத்துடன் இதனை எழுதுகிறேன், தலிபான்களிடமிருந்து எனது அழகிய நாட்டை காப்பாற்ற நீங்கள் எங்களுடன் இணைவீர்கள் என்ற ஆழ்ந்த நம்பிக்கையுடன் எழுதுகிறேன்” என தலிபான்களிடம் ஆப்பானிஸ்த்தான் வீழ்வதற்கு 2 நாடகளுக்கு முன் (13.08.21) இந்தக் கடிதத்தை தனது ருவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
”ஏற்கனவே ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கானி நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளார். இந்த நிலையில் மேற்கத்திய இராஜதந்திரிகள், பொதுமக்கள் மற்றும் ஆப்கானியர்களை புதிய ஆட்சியாளர்கள் இலக்கு வைப்பார்கள் என்ற பயத்தில், அவர்களைப் பாதுகாப்பாக ஏற்றிச் செல்ல ஒரு பாரிய முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.”
“அவர்கள் எங்கள் மக்களை கொன்று குவித்தனர், பல குழந்தைகளை கடத்திச் சென்றனர். ஆடையின் பெயரால், ஒரு பெண்ணை அவர்கள் கொன்றனர். எங்களுக்கு பிடித்த நகைச்சுவை நடிகர்களில் ஒருவரை அவர்கள் சித்திரவதை செய்து கொன்றனர். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கவிஞரை அவர்கள் கொன்றனர் ”
அரசாங்கத்துடன் தொடர்புடைய மக்களை அவர்கள் கொன்றனர், எங்களில் சிலர் பொது இடங்களில் தூக்கிலிடப்பட்டனர், மில்லியன் கணக்கான குடும்பங்களை அவர்கள் இடம்பெயர்த்தனர். இந்த மாகாணங்களில் இருந்து தப்பியோடிய பின், பல குடும்பங்கள், காபூலில் உள்ள முகாம்களில் தங்கியுள்ளன. அங்கு அவர்கள் மிகவும் நெருக்கடியான நிலையில் உள்ளனர். ” என சஹ்ரா கரிமி தலிபான்களுடனான அனுபவம் பற்றி எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் தொடர்ந்து அவர் எழுதும் போது ” பால் பற்றாக்குறை காரணமாக சுறுசுறுப்பு இன்றிய குழந்தைகள் முகாம்களில் இறக்கின்றனர். இது ஒரு மனிதாபிமான நெருக்கடி. இன்னும் உலகம் அமைதியாக உள்ளது. இந்த அமைதிக்கு நாங்கள் பழகிவிட்டோம், ஆனால் அது நியாயமில்லை என்று எங்களுக்குத் தெரியும். எங்கள் மக்களை விட்டு விலகும் இந்த முடிவு பெருந் தவறு என்று எங்களுக்குத் தெரியும், எங்களுக்கு உங்கள் குரல் தேவை”.
”எதற்காக என் நாட்டில் ஒரு திரைப்படத் தயாரிப்பாளராக நான் மிகவும் கடினமாக உழைத்தேனோ அது விணாககப் போவதற்கும், வீழ்ச்சியடைவதற்கும் வாய்ப்புள்ளது. தாலிபான்கள் ஆட்சியைப் பிடித்தால், அவர்கள் அனைத்து கலைகளையும் தடை செய்வார்கள். அவர்களின் இலக்குக்குரிய பட்டியலில் அடுத்ததாக நானும் மற்ற திரைப்பட தயாரிப்பாளர்களும் இருக்க முடியும். அவர்கள் பெண்களின் உரிமைகளை மீறுவார்கள், எங்களுடைய வெளிப்பாடுகள் யாவும் அமைதியாகிவிடும்.” என குறிப்பிட்டுள்ளார்.
அந்த வகையில் பொழுதுபோக்கு துறைசார்ந்த சமூகத்தில் உள்ளவர்களுக்கு இந்த தகவலை பரப்புமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். “தயவுசெய்து உங்கள் திரைப்படத் தயாரிப்பாளர்களும், கலைஞர்களும் எங்கள் குரலாக ஒலிக்கவும், இந்த உண்மையை உங்கள் ஊடகங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். எங்களைப் பற்றி உங்கள் சமூக ஊடகங்களில் எழுதுங்கள்.”
நம்மை திரும்பிப் பார்க்காது, பாராமுகமாக இந்த உலகம் இருந்துவிடக் கூடாது. ஆப்கானிஸ்தானின் பெண்கள், குழந்தைகள், கலைஞர்கள் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்கள் சார்பாக எங்களுக்கு உங்கள் ஆதரவும் குரலும் தேவை. இதுதான் இப்போது நமக்குத் தேவையான மிகப்பெரிய உதவி.
இந்த உலகத்தை தலிபான்களுகளிடம் விட்டுவிடாமல் இருக்க எங்களுக்கு உதவுங்கள். காபூல் தலிபான் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு எங்களுக்கு உதவுங்கள். எங்களுக்கு சில நாட்கள் மட்டுமே உள்ளன. ” என இதயம் நொருங்கும் கடிதத்தை எழுதி உள்ளார்.
அவரது வசிப்பிடத்திற்கு அருகில் தலிபான்கள் நுழைந்த போது பதட்டத்துன் வீதியில் ஓடிக்கொண்டு இருக்கும் ஒரு காணொளியையும் வெளியிட்டுள்ளார். அவரது கடிதத்தின் முழுமையையும் – காணொளியையும் கீழ் உள்ள அவரது ருவீட்டர் இணைப்பில் காண முடியும்.