ஆண்கள் மற்றும் பெண்கள் பங்கேற்கும் சின்சினாட்டி பகிரங்க டென்னிஸ் தொடர், தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகின்றது.
இதன்படி தற்போது மூன்றாவது சுற்றுப் போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளன. இப்போட்டிகளின் முடிவுகளை பார்க்கலாம்.
முதலாவதாக ஆண்கள் ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்றுப் போட்டிகளின் முடிவுகளை பார்க்கலாம்.
ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்றுப் போட்டியில், கிரேக்கத்தின் ஸ்டெபீனோஸ் சிட்ஸிபாஸ், இத்தாலியின் லொரென்ஸோ சொனிகோவுடன் மோதினார்.
பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், ஸ்டெபீனோஸ் சிட்ஸிபாஸ், 5-7, 6-3, 6-4 என்ற செட் கணக்குகளில் வெற்றிபெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.
ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்றுப் போட்டியில், ஜேர்மனியின் அலென்ஸான்டர் ஸ்வெரவ், அர்ஜென்டீனாவின் கைடோ பெல்லாவுடன் பலப்பரீட்சை நடத்தினார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று அலென்ஸான்டர் ஸ்வெரவ் காலிறுதிக்குள் நுழைந்தார்.
ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்றுப் போட்டியில், கனடாவின் பெலிக்ஸ் ஆகர் அலியாசிம், இத்தாலியின் மெட்டியோ பெரிட்டினியை எதிர்கொண்டார்.
எதிர்பார்ப்பு மிக்க இப்போட்டியில், 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்குகளில் பெலிக்ஸ் ஆகர் அலியாசிம், வெற்றிபெற்று காலிறுதிக்கு தகுதிபெற்றார்.
அடுத்ததாக பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்றுப் போட்டிகளின் முடிவுகளை பார்க்கலாம்.
பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்றுப் போட்டியில், சுவிஸ்லாந்தின் பெலின்டா பென்ஸிக், செக் குடியரசின் கரோலினா முச்சோவாவுடன் மோதினார்.
இப்போட்டியில், முதல் செட்டை பெலின்டா பென்ஸிக், 7-5 என போராடிக் கைப்பற்றினார்.
தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டில், 2-1 என்ற செட் கணக்கில், பெலின்டா பென்ஸிக் முன்னிலைப் பெற்றிருந்த போது, கரோலினா முச்சோவா போட்டியிலிருந்து விலகினார். இதனால் பெலின்டா பென்ஸிக் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.
பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்றுப் போட்டியில், ஜப்பானின் நவோமி ஒசாகா, சுவிஸ்லாந்தின் ஜில் டீச்மேனுடன் மோதினார்.
இதில் யாரும் எதிர்பாராத வகையில், 3-6, 6-3, 6-3 என்ற செட் கணக்குகளில் சுவிஸ்லாந்தின் ஜில் டீச்மேன் வெற்றிபெற்று காலிறுதிக்குள் அடியெடுத்து வைத்தார்.
பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்றுப் போட்டியில், செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா, அமெரிக்காவின் ஜெசிகா பெகுலாவை எதிர்கொண்டார்.
பரபரப்பான இப்போட்டியில், கரோலினா பிளிஸ்கோவா, 6-4, 7-6 என்ற செட் கணக்குகளில் வெற்றிபெற்று காலிறுதிக்குள் நுழைந்தார்.