நேட்டோ மற்றும் முன்னாள் ஆப்கான் அரசாங்கத்திற்காக பணியாற்றியவர்களை தேடும் பணியில் தலிபான்கள் தீவிரமாக களமிறங்கியுள்ளதாக உளவு தகவல்கள் தெரிவிக்கின்றன.
நோர்வேயை சேர்ந்த உலகளாவிய பகுப்பாய்வு மையமான RHIPTO மையம் வெளியிட்டுள்ள இரகசிய அறிக்கையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து இந்த அறிக்கையை தயாரித்த குழுவின் தலைவர் கிறிஸ்டியன் நீல்மன் கூறுகையில், ‘தலிபான்களால் பலர் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர். அச்சுறுத்தல்கள் தெளிவாக தெரிவிகின்றன’ என கூறினார்.
RHIPTO மையம் ஐக்கிய நாடுகள் சபைக்கு உளவு செய்திகளை வழங்குகிறது என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
இதனிடையே வீடு வீடாக சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டு வரும் தலிபான்கள், அவர்களின் குடும்ப உறுப்பினர்களையும் அச்சுறுத்தி வருகின்றனர் என ஐ.நா தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய கடும்போக்கு இஸ்லாமியவாத குழுவான தலிபான் அமைப்பு, தாங்கள் பழிவாங்கும் செயலில் ஈடுபடமாட்டோம் என தெரிவித்திருந்த நிலையில், இந்த செய்தி வெளியாகியுள்ளது.
ஆஃப்காஸ்தானில் அமெரிக்க இராணுவத்துக்கு உதவிய, ஆயிரக்கணக்கான ஆப்கானியர்களை வெளியேற்றும் நடவடிக்கையை ”Operation Allies Refuge’ என்ற பெயரில் தொடங்கியுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
பல ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் அமெரிக்க இராணுவ படைகளுக்கு மொழிபெயர்ப்பு உள்ளிட்ட பணிகளில் உதவிய ஆப்கானியர்களே இவ்வாறு வெளியேற்றப்படவுள்ளனர்.
துருப்புக்கள் திரும்பப் பெற்றப் பின்னர், அமெரிக்க படைகளுக்கு உதவிபுரிந்த ஆப்கானியர்களுக்கு தலிபான்களால் ஆபத்து ஏற்படும் என்ற அச்சத்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக விசா விண்ணப்பங்கள் அனுமதிக்கப்படும்வரை, மீட்கப்படும் சுமார் 2,500பேர் அமெரிக்காவிலோ அல்லது வேறு நாட்டிலோ உள்ள அமெரிக்காவின் படைத்தளத்தில் தங்க வைக்கப்படுவார்கள்.
இதேபோல முன்னதாக ஆப்கானிஸ்தானில் பிரித்தானிய படைகளுக்கு மொழிபெயர்ப்பு உள்ளிட்ட பணிகளில் உதவிய ஆப்கானியர்களுக்கு குடியுரிமை வழங்கவுள்ளதாக பிரித்தானியா அறிவித்திருந்தது.
மீள் குடியேற்றத் திட்டத்தின் கீழ் ஏற்கெனவே 1,400 மொழிபெயர்ப்பாளர்களும் அவர்களது உறவினர்களும் பிரித்தானியாவில் குடியமர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.