கடுமையான முடக்க கட்டுப்பாடுகள் அமுலில் உள்ள நிலையில் அவுஸ்ரேலியாவின் சிட்னியில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது.
இந்நிலையில் அனைத்து பகுதிகளிலும் கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்கி தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை அதிகரிக்க சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இரண்டு மாத முடக்கம் இருந்தபோதிலும், டெல்டா மாறுபாடு காரணமாக நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் 919 புதிய நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்களில் மொத்தம் 113 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர் என்றும் அவர்களில் 98 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படவில்லை என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
கொரோனா வைரஸின் மூன்றாவது அலையை கட்டுப்படுத்த போராடி வரும் அஸ்ரேலியா, அதன் மிகப்பெரிய நகரங்களான சிட்னி மற்றும் மெல்போர்ன் உள்ளிட்டவற்றினை முடக்கியுள்ளன.
மேலும் தடுப்பூசி நடவடிக்கையையும் துரிதப்படுத்தப்பட்டுள்ள நிலையில் 16 வயதுக்கு மேற்பட்டோரில் சுமார் 31% பேருக்கு முழுமையாகவும் 54% பேருக்கு குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.
விக்டோரியாவில், புதிய வழக்குகள் தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக வீழ்ச்சியடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக 45 புதிய நோயாளிகள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 16 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தையும் துரிதப்படுத்த அதிகாரிகள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.
டெல்டா மாறுபாடு பரவிவரும் நிலையில் அவுஸ்ரேலியாவில் இதுவரை 46,600 க்கும் மேற்பட்ட நோயாளிகள் மட்டுமே பதிவாகியுள்ளதோடு 986 இறப்புகள் பதிவாகியுள்ளன.