சீனா தங்களுக்கு வழங்கிய சுமார் 30 லட்சம் எண்ணிக்கையிலான கொரோனா தடுப்பூசிகளை வேறு நாட்டுக்கு திருப்பி அனுப்பிவிடுமாறு வடகொரியா தெரிவித்ததாக, ஐக்கிய நாடுகள் சபையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஏழை நாடுகளுக்கு தடுப்பூசிகள் கிடைப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட கோவேக்ஸ் திட்டத்தின் கீழ் சீனா தயாரித்த சினோவாக் தடுப்பூசிகள் வடகொரியாவுக்கு வழங்கப்பட்டன.
வடகொரியா தடுப்பூசிகளை நிராகரிப்பது இது முதல் முறையல்ல. கடந்த ஜூலை மாதத்தில் சுமார் 20 இலட்சம் டோஸ் அஸ்டராஸெனெகா தடுப்பூசியை வடகொரியா நிராகரித்தது.
பக்கவிளைவு ஏற்படும் அபாயம் இருப்பதைச் சுட்டிக் காட்டி தடுப்பூசிகளை மறுத்ததாக உளவுத்துறையுடன் தொடர்புடைய தென்கொரியாவை சேர்ந்த சிந்தனைக் குழு ஒன்று தெரிவித்தது.
அதேபோல ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை வடகொரியாவுக்கு வழங்க ரஷ்யா பல முறை முன்வந்ததாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லவ்ரோவ் கடந்த ஜூலை மாதம் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் தற்போது சீனாவால் கொடுக்கப்பட்ட தடுப்பூசிகளையும் வடகொரியா நிராகரித்துள்ளது.
கடந்த ஒகஸ்ட் 19ஆம் திகதி வரை வட கொரியாவில் யாருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டதாக பதிவு செய்யப்படவில்லை என உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.
உலகில் கொரோனா தொற்று தொடங்கிய காலத்தில் இருந்தே வடகொரியா கடுமையான கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்து வருகிறது. கடந்த ஆண்டு ஜனவரி மாதத்திலேயே அது தனது எல்லைகளை முற்றிலுமாக மூடிவிட்டது.
வடகொரியாவின் அரச ஊடகங்கள் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் போன்றவற்றில் தடுப்பூசி போட்டுக் கொண்ட சிலருக்கு பாதகமான பக்கவிளைவுகள் ஏற்பட்டதை சுட்டிக்காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.