பிரித்தானியாவில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு பிட்கொயின் (இலத்திரனியல் பணம்) மூலம், பணம் அனுப்பியவருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு நன்கு அறியப்பட்ட, நம்பகமான மற்றும் மிகவும் சுறுசுறுப்பான உறுப்பினராக விளங்கிய 28 வயதான ஹிட்பாம் சவுத்ரி என்பவருக்கே இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
லெய்செஸ்டர்ஷயரில் உள்ள ஒரு சிறிய நகரத்திலிருந்து ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு, 55,000 பவுண்டுகளுக்கு மேல் அனுப்பியதாக இவர் மீது குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.
ஐ.எஸ். உறுப்பினர் சவுத்ரி, ஒரு பிட்காயின் நிதி அமைப்பை அமைத்து 2018ஆம் ஆண்டு 16,000 பவுண்டுகள் மற்றும் 2019ஆம் ஆண்டு 35,000 பவுண்டுகளை பறிமாற்றியுள்ளார்.
அத்துடன், ஐ.எஸ். அமைப்புக்கு இரண்டு நிதியுதவி மற்றும் ஒசாமா பின்லேடனின் உரையை மொழிபெயர்த்தல் உட்பட குழுவிற்கான பிரச்சார காணொளிகளை தயாரித்தல் மற்றும் பரப்புதல் ஆகிய நான்கு குற்றச்சாட்டுகள் சவுத்ரி மீது சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடன் சேர முயற்சி செய்து தோல்வியுற்ற பிறகு, அவர் ஐ.எஸ்ஸுக்கு விசுவாசமாக இருந்ததாகக் கூறப்படுகின்றது. பின்னர் அடுத்த மூன்று வருடங்கள் அவர் உறுப்பினராக செயற்பட்டுள்ளார். பிரித்தானியாவிலிருந்து ஸ்லீப்பர் செல் முகவராக செயற்பட்டுள்ளார்.