பாசையூர் பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்து, அடாவடியில் ஈடுபட்டுத் தப்பித்த குழுவைச் சேர்ந்த 7 பேர், யாழ்.பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் இடம்பெற்று அரை மணிநேரத்தில், இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதென பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பாசையூர் அந்தோனியார் ஆலயத்துக்கு அருகிலுள்ள வீடொன்றுக்குள், நேற்று (திங்கட்கிழமை) பிற்பகல் 2.30 மணியளவில் புகுந்த 7 பேர் கொண்ட குழுவொன்று, பெறுமதியான பொருட்களை உடைத்து, அடாவடியில் ஈடுபட்டதுடன் வீட்டிலிருந்தவர்களையும் அச்சுறுத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளது.
இதன்போது சம்பவம் அறிந்து அவ்விடத்திற்கு விரைந்த யாழ்.பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் விசாரணையை முன்னெடுத்தனர்.
குறித்த விசாரணையின் அடிப்படையில் 3 மோட்டார் சைக்கிள்களில் பயணித்த 7 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து வாள் ஒன்றும் இரண்டு மரக்கட்டைகளும் கைப்பற்றப்பட்டன.
பாசையூர், மணியந்தோட்டம் பகுதிகளைச் சேர்ந்த 22 வயதுக்கும் 27 வயதுக்கும் உட்பட்ட 7 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 7பேரும் யாழ்.பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.