ஆப்கானிஸ்தான் மீதான பொருளாதாரத் தடைகளை உலக நாடுகள் விலக்கிக் கொள்ள வேண்டும் என சீனா தெரிவித்துள்ளது.
சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, ஜி20 உச்சி மாநாட்டில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘ஆப்கானின் அந்நியச் செலாவணி அந்நாட்டின் சொத்து. அது அவர்களுக்கே சேர வேண்டும். ஆப்கான் மீதான பொருளாதாரத் தடைகளை உலக நாடுகள் விலக்கிக் கொள்ள வேண்டும். சர்வதேச நாடுகள் ஆப்கான் அரசாங்கத்தை அங்கீகரிக்க வேண்டும்.
ஆப்கானின் வெளிநாட்டு நிதி ஆதாரங்களை முடக்கி வைத்து அந்த நாட்டுக்கு அரசியல் அழுத்தம் தரக்கூடாது. அவர்களின் நிதியை அவர்களுக்கு எதிராகப் பயன்படுத்தக் கூடாது. ஆப்கான் மக்களுக்காக கூடுதலாக நிதியுதவி செய்ய வேண்டும்.
ஆப்கானிஸ்தான் நெருக்கடியில் இருக்கிறது. அதன் நெருக்கடி காலத்தில் மிக அவசரமானத் தேவைகளுக்கு நிதியை விடுவிக்க வேண்டும். ஆப்கானிஸ்தானில் நிலவும் பணப்புழக்கத்தை அதிகரிக்க வேண்டும்.
அதேவேளையில், ஆப்கானிஸ்தானும் பல்வேறு பயங்கரவாத அமைப்புகளையும் கட்டுப்படுத்தி தனது வாக்குறுதியைக் காப்பாற்ற வேண்டும்’ என கூறினார்.