சவுதி அரேபியாவுடன் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தை வளைகுடா நாடுகளின் பாதுகாப்பில் முக்கியத்துவத்தை ஏற்படுத்தியுள்ளது என ஈரான் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஈரான் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் சயீத் கூறுகையில், ‘ஈரான் – சவுதி அரேபியா இடையே நடைபெற்று வரும் பேச்சுவார்த்தை இரு நாடுகளிடையே நட்புறவை வலுப்படுத்தியுள்ளது.
இரு நாடுகளும் வேறுபாடுகளைக் கடந்து சமாதானம், ஸ்திரத் தன்மையுடன், பிராந்திய வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு தருவதுடன் புதிய அத்தியாயத்தில் நுழைய முடியும்’ என கூறினார்.
ஈரானின் முன்னாள் ஜனாதிபதி ஹசன் ரவ்ஹானி ஆட்சியில் இருக்கும்போது சவுதியுடனான பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டது. இதனைத் தற்போது ஈரானி ஜனாதிபதியாக உள்ள இப்ராஹிம் ரைசி தொடர்கிறார்.
சவுதி அரேபியாவில் உள்ள மிகப்பெரிய எண்ணெய் வளப்பகுதியான ஹிஜ்ரா குரையாஸில் அராம்கோ நிறுவனம் செயற்பட்டு வருகிறது.
இங்குள்ள அப்கய்க் மற்றும் குராயிஸ் பகுதிகளில் உள்ள இரு எண்ணெய் ஆலைகள் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் ஏமன் கிளர்ச்சிப் படையினர் தாக்குதல் நடத்தினர்.
இந்தத் தாக்குதலுக்கு ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றனர். எனினும் இதன் பின்னணியில் ஈரான் உள்ளதாக சவுதி, அமெரிக்கா ஆகிய நாடுகள் குற்றம் சுமத்தியுள்ளன. இதனால் ஈரான் – சவுதி இடையே பதற்றம் நீடித்தது. இந்த நிலையில் பேச்சுவார்த்தை மூலம் சமாதானத்தை ஏற்படுத்த இரு நாடுகளும் முடிவு செய்துள்ளன.