எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டால், பேருந்துக் கட்டணத்தையும் அதிகரிக்க நேரிடும் என்று தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எரிபொருட்களின் விலையை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், இதுதொடர்பாக அரசாங்கம் தற்போது ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையிலேயே, அரசாங்கம் அவ்வாறான நடவடிக்கையினை மேற்கொண்டால் எதிர்வரும் நாட்களில் பேருந்து கட்டணத்திலும் திருத்தம் மேற்கொள்ள நேரிடும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இதுவரையில் 30 வீதம் மாத்திரமே பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்துத் துறைக்கான மேலதிக பாகங்கள் மற்றும் டயர்களின் விலைகள் பாரியளவு அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், எரிபொருள் விலை அதிகரித்தால் பொதுப் போக்குவரத்துத்துறை பாரிய நெருக்கடியைச் சந்திக்க நேரிடும் என்று இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.