பாதுகாப்புத் திறனை மேம்படுத்துவது மட்டுமே ஆக்கஸ் கூட்டணியின் நோக்கமாகும் என அவுஸ்ரேலியா தெரிவித்துள்ளது.
பிரித்தானியா, அவுஸ்ரேலியா, நியூஸிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு இடையே நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற மாநாட்டில் உரையாற்றிய அவுஸ்ரேலிய பாதுகாப்புத் துறை அமைச்சர் பீட்டர் டட்டன் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘ஆக்கஸ் கூட்டணி ஒரு இராணுவ ஒத்துழைப்போ, பாதுகாப்பு ஒப்பந்தமோ கிடையாது.
அந்தக் கூட்டணியில் நாங்கள் இணைந்ததால் எங்களது பாதுகாப்புக் கொள்கையில் மாற்றம் ஏற்பட்டுவிட்டதாக யாரும் கருதக் கூடாது.
அவுஸ்ரேலியாவின் பாதுகாப்புத் திறனை மேம்படுத்துவது மட்டுமே ஆக்கஸ் கூட்டணியின் நோக்கமாகும். இந்தக் கூட்டணியால் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவுடனான எங்களது ஒத்துழைப்பு சிறப்படைந்துள்ளது’ என கூறினார்.
ஆக்கஸ் கூட்டணியால் தென் சீனக் கடல் பகுதி போன்ற பகுதிகளில் பதற்றம் அதிகரிக்கலாம் என்று மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகள் கவலை தெரிவித்த நிலையில், அவுஸ்ரேலியாவின் இந்த கருத்து வெளியாகியுள்ளது.
தென் சீனக் கடல் பகுதி முழுவதற்கும் உரிமை கோரி வரும் சீனா, அங்குள்ள தீவுகளை இராணுவமயமாக்கி வருகிறது. சர்வதேச கடல்வணிக வழித்தடமாகத் திகழும் இந்தப் பகுதியை சீனா ஆக்கிரமிப்பதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்தச் சூழலில், தென் சீனக் கடலை உள்ளடக்கிய இந்தோ- பசிபிக் பிராந்தியப் பாதுகாப்புக்கான புதிய முத்தரப்புக் கூட்டணி, அமைக்கப்பட்டுள்ளது.