தனிப்பட்ட நாடுகள் அல்லது நாடுகளின் கூட்டங்களால் சர்வதேச விதிகளை தீர்மானிக்க முடியாது என அமெரிக்காவை சீனா மறைமுகமாக சாடியுள்ளது.
ஐ.நா.வில் சீனாவின் சட்டப்பூர்வ இருக்கை மீட்டெடுக்கப்பட்ட 50ஆவது ஆண்டு நிறைவை குறிக்கும் மாநாட்டில் உரையாற்றும் போது, சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘ஐ.நா. சபையின் அதிகாரத்தையும் நிலைப்பாட்டையும் நாம் உறுதியுடன் நிலைநிறுத்த வேண்டும். சர்வதேச விதிகளை 193 ஐ.நா. உறுப்பு நாடுகளால் மட்டுமே உருவாக்க முடியும்.
தனிப்பட்ட நாடுகள் அல்லது நாடுகளின் கூட்டங்களால் தீர்மானிக்க முடியாது. சீன மக்கள் எப்போதும் ஐ.நாவின் அதிகாரத்தையும் புனிதத்தையும் நிலைநிறுத்தியுள்ளனர்.
ஐ.நாவுடனான சீனாவின் ஒத்துழைப்பு கடந்த 50 ஆண்டுகளாக சீராக ஆழமடைந்துள்ளது’ என கூறினார்.
உலகின் இருபெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்கா மற்றும் சீனா இடையே வர்த்தக போர், கொவிட் தொற்று தோற்றம், தாய்வான் விவகாரம் என பல்வேறு விடயங்களில் மோதல் போக்கு அதிகரித்து வருகிறது.
அண்மையில், தாய்வானை சீனா தாக்கினால், அமெரிக்கா தாய்வானுக்கு துணை நிற்கும் என அமெரிக்கா கூறியிருந்தது.
இந்தநிலையில், அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளை மறைமுக குறிப்பிடும் வகையில், தனிப்பட்ட நாடுகள் அல்லது நாடுகளின் கூட்டங்களால் சர்வதேச விதிகளை தீர்மானிக்க முடியாது என சீனா கூறியுள்ளது.