கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றின் அதிகம் வீரியம் கொண்ட ஓமிக்ரான் மாறுபாட்டின் பரவலைத் தடுக்கும் உலகளாவிய முயற்சியின் ஒரு பகுதியாக, தென்னாபிரிக்கா உள்ளிட்ட பிற எட்டு நாடுகளில் இருந்து அமெரிக்கா அல்லாத குடிமக்களுக்கான பயணத்தை அமெரிக்கா கட்டுப்படுத்தும்.
தென்னாபிரிக்காவைத் தவிர, போட்ஸ்வானா, சிம்பாப்வே, நமீபியா, லெசோதோ, ஈஸ்வதினி, மொசாம்பிக் மற்றும் மலாவி ஆகியவை புதிய கட்டுப்பாடுகளில் சேர்க்கப்பட்டுள்ளன. திங்கள்கிழமை முதல் இந்த கட்டுப்பாடு அமுலுக்கு வருகின்றது.
இந்த தடை எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை.
சர்வதேச சுற்றுலாப் பயணிகளுக்கான தடுப்பூசி தேவைகளுக்கு ஆதரவாக தென்னாப்பிரிக்கா உட்பட 30க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து பார்வையாளர்கள் மீதான தொற்றுநோய் பயணக் கட்டுப்பாடுகளை நிர்வாகம் நீக்கிய மூன்று வாரங்களுக்குள் இந்த முடிவு வந்துள்ளது.
கனடா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் அனைத்தும் வெள்ளிக்கிழமை தென்னாபிரிக்காவிலிருந்து வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகளை அறிவித்தன.
பெல்ஜிய அதிகாரிகள், ஓமிக்ரான் மாறுபாட்டின் பல தொற்றுகள் ஏற்கனவே அங்கு அடையாளம் காணப்பட்டதாக அறிவித்தனர்.
பயணக் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து நேற்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்,
‘அறிவியல் மற்றும் எனது மருத்துவக் குழுவின் அறிவுரைகளின்படி, தீர்மானங்கள் எடுக்கப்படும். நாங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென்று நான் முடிவு செய்துள்ளேன். இது ஒரு பெரிய கவலை. இதுதவிர, மாறுபாடு பற்றி எங்களுக்கு அதிகம் தெரியாது. இது வேகமாக பரவுகிறது’ என கூறினார்.