உலக மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள, தென்னாபிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள அதிக வீரியம் கொண்ட புதிய வகை கொரோனா வைரஸ்க்கு, ‘ஒமிக்ரான்’ என விஞ்ஞானிகள் பெயர் சூட்டியுள்ளனர்.
பி.1.1.529 என்ற அடையாள குறியீட்டை முன்னதாக வழங்கியிருந்த உலக சுகாதார அமைப்பு, தற்போது கிரேக்க எழுத்தான ஒமிக்ரான் என பெயர் வைத்துள்ளனர்.
இந்தப் புதிய வகை கொரோனா வைரஸ் கட்டுக்கடங்காமல் வேகமாக பரவக்கூடியது என எச்சரித்துள்ள விஞ்ஞானிகள், இந்த வைரசை ‘கவலைக்குரிய வைரஸ் வகை என்ற பிரிவில் சேர்த்துள்ளனர்.
சீனாவின் வுஸான் நகரில் உருவான கொரோனா வைரஸ் ஆயிரம் தடவைக்கு மேல் உருமாறி புதிய வகை வைரஸ்களாக உருவாகி உள்ளது. இவற்றில் சில அதிக வீரியம் கொண்டவையாகவும் சில வீரியம் இல்லாதவையாகவும் உள்ளன.
புதிதாக உருவான டெல்டா, பீட்டா வகை வைரஸ்கள் உலகம் முழுவதும் அதிக வீரியத்துடன் தொடர்ந்து பரவி வருகின்றன.
இந்தநிலையில், தற்போது தென்னாபிரிக்காவில் புதிதாக ‘ஒமிக்ரான்’ எனும் கொரோனா வைரஸ் மாறுபாடொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.