ஹாலி எல பாடசாலையொன்றில் மாணவர்களுக்கான அங்கீகாரமற்ற உளவியல் நிகழ்ச்சிகளை நடாத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஆலோசகர் ஒருவரும் அவரது மூன்று தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பாடசாலையில் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுவதாகவும், அதற்காக வந்த பயிற்றுவிப்பாளர், தனியார் பாதுகாவலர்களுடன் கறுப்பு நிற ஆடை அணிந்து வாக்கிடோக்கிகள் மற்றும் கைப்பேசிகளை ஏந்தியவாறு வருகை தந்துள்ளதாக கிடைத்த தகவலையடுத்தே இவர்கள் நேற்று(புதன்கிழமை) கைது செய்யகப்பட்டிருந்தனர்.
குறித்த வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு வலய அல்லது மாகாண கல்வி அதிகாரிகளிடமிருந்து உத்தியோகபூர்வ அனுமதி பெறப்படவில்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், இந்த நிகழ்ச்சியை நடத்திய ஆலோசகர் எந்த ஒரு பதிவு செய்யப்பட்ட நிறுவனத்திலும் இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்த தகுதியற்றவர் என்பதும் தெரியவந்தது.
பயிற்றுவிப்பாளருடன் வந்த மூன்று பாதுகாவலர்களிடம் இருந்து மூன்று வாக்கிடோக்கிகள், ஒரு ஏர் ரைபிள் மற்றும் ஏர் ரைபிளுக்கு பயன்படுத்தப்பட்ட 129 தோட்டாக்கள் எனவும் மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 36, 24, 23 மற்றும் 30 வயதுடைய சிலாபம், இரத்மலானை மற்றும் நீர்கொழும்பு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களை பதுளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.