மெக்ஸிகோவில் நெடுஞ்சாலையில் சரக்கு லொறி விபத்துக்குள்ளானதில், குறைந்தது 53பேர் உயிரிழந்துள்ளனர்.
சியாபாஸ் மாநில தலைநகரை நோக்கி செல்லும் நெடுஞ்சாலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து சம்பவிக்கும் போது லொறியில் 107 பேர் இருந்ததாக கூறப்படுகின்றது.
சியாபாஸ் மாநில சிவில் பாதுகாப்பு அலுவலகத்தின் தலைவர் லூயிஸ் மானுவல் மோரேனோ, காயமடைந்தவர்களில் சுமார் 21பேர் பலத்த காயங்களுடன் உள்ளூர் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்றார்.
காயமடைந்தவர்களில் மூவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக பெடரல் அட்டர்னி ஜெனரல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சம்பவ இடத்திலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள், பாதிக்கப்பட்டவர்கள் நடைபாதை முழுவதும் மற்றும் டிரக்கின் சரக்கு பெட்டியின் உள்ளே சிதறிக் கிடப்பதைக் காட்டியது.
பாதிக்கப்பட்டவர்கள் மத்திய அமெரிக்காவில் இருந்து குடியேறியவர்கள் எனத் தோன்றினாலும், அவர்களது தேசிய இனம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. தப்பிப்பிழைத்தவர்களில் சிலர் தாங்கள் அண்டை நாடான குவாத்தமாலாவைச் சேர்ந்தவர்கள் என்று கூறியதாக மோரேனோ தெரிவித்தார்.
மத்திய அமெரிக்காவில் வறுமை மற்றும் வன்முறையின் காரணமாக புலம்பெயர்ந்தோர் பொதுவாக அமெரிக்க எல்லையை அடைய மெக்சிகோ வழியாக நடைபயணம் மேற்கொள்கின்றனர், மேலும் சில சமயங்களில் மிகவும் ஆபத்தான முறையில் கடத்தல்காரர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட பெரிய லாரிகளில் ஏறுகின்றனர். அவர்கள் இவ்வாறு பயணம் மேற்கொள்ளும் போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
சியாபாஸ் மாநிலத்தில் உள்ள டக்ஸ்ட்லா குட்டிரெஸ் நகருக்கு வெளியே அருகே உள்ள ஆபத்தான வளைவினை கடக்கும் போது இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகின்றது.