இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசிடம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.
இதுதொடா்பாக வெளிவிவகாரத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கரை தொலைபேசியில் தொடா்புகொண்டு தமிழக முதலமைச்சர் உரையாற்றியுள்ளார்.
இந்நிலையில், தமிழக முதலமைச்சரின் கோரிக்கைக்கு இணங்க உடனடியாக இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பதாக மத்திய அமைச்சா் உறுதியளித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே வெளிவிவகாரத் துறை அமைச்சா் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் கடிதமும் எழுதியுள்ளாா். தமிழக மீனவா்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை தந்திரமாக தடுத்து நிறுத்தும் இலங்கை கடற்படையின் செய்பாடுகளை இனிமேலும் அனுமதிக்கக் கூடாது என்று அதில் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
யாழ்ப்பாணம் – நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த 43 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதுடன் 6 படகுகளும் கைப்பற்றப்பட்டன.
அதன்பின்னர், கைது செய்யப்பட்ட மீனவர்கள் யாழ்ப்பாணம் கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்தின் ஊடாக ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதன்போது ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதிபதி 43 தமிழக மீனவர்களையும் எதிர்வரும் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.