கஸகஸ்தானில் இடம்பெற்ற மக்கள் போராட்டத்தில், ஏறக்குறைய 8,000 பேரைக் கைது செய்துள்ளதாக அந்த நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த வாரம் நடைபெற்ற வன்முறைப் போராட்டங்களில் தொடர்புடைய 7,939 பேர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தது.
கைது செய்யப்பட்டவர்களில் தேசிய உளவுத் துறை மற்றும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் முன்னாள் தலைவர் கரீம் மசிமோவும் ஒருவர் ஆவார்.
இதுதவிர, நாடு முழுவதும் நிலமையைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக தேசிய பாதுகாப்பு சபை நேற்று (திங்கட்கிழமை) அறிவித்தது.
அத்துடன் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களில் 164 பேர் உயிரிழந்ததாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
முன்னர் போராட்டக்காரர்கள் 26 பேரும், பாதுகாப்புப் படையினர் தரப்பில் 18 பேரும் உயிரிழந்ததாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள உயிரிழப்பு எண்ணிக்கையில் பாதுகாப்புப் படையினரின் உயிரிழப்பு எண்ணிக்கையும் சேர்க்கப்பட்டுள்ளதா என்பது குறித்து தெளிவுபடுத்தப்படவில்லை.
இதனிடையே நாட்டில் நடந்த வன்முறை ஆட்சியை கவிழ்க்கும் ஒரு முயற்சி என ஜனாதிபதி காசிம் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் இந்த சதி முன்னாள் சோவியத் நாடுகளின் இராணுவ கூட்டணி தலைவர்களால் ஒருங்கிணைக்கப்பட்டது எனவும் அவர் கூறினார். எனினும் அவர் எந்த ஒரு நாட்டையும் குறிப்பிட்டு சொல்லவில்லை.
மத்திய ஆசிய நாடான கஸகஸ்தானில் வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் திரவ பெட்ரோலிய வாயுவின் விலையை அரசாங்கம் இரண்டு மடங்காக உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் புரட்சி வெடித்தது.
பின்னர் அந்த நாட்டின் முக்கிய நகரமான அல்மாட்டியில் மக்கள் போராட்டம் பெரும் வன்முறையாக மாறியது.
இதில் அல்மாட்டி நகரில் உள்ள ஜனாதிபதி மாளிகை, மேயர் அலுவலகம் மற்றும் 100க்கும் மேற்பட்ட பொலிஸ் வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. இதை தொடர்ந்து, அல்மாட்டி நகரில் அவசர நிலையை பிரகடனப்படுத்தப்பட்டது.