கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தின் நிர்மாணப் பணிகள் சற்று முன்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணிகளுக்காக இலங்கை துறைமுக அதிகார சபையினால் 510 மில்லியன் டொலர் முதலீடு செய்யப்படவுள்ளது.
அத்துடன், ஆசிய அபிவிருத்தி வங்கியினால் வழங்கப்படும் 300 மில்லியன் டொலர் கடன் தொகையும் இந்த அபிவிருத்திப் பணிகளுக்கு பயன்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தின் நிர்மாணப் பணிகள் இன்று ஆரம்பம்
கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தின் நிர்மாண பணிகள் இன்று (புதன்கிழமை) முதல் ஆரம்பமாகவுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன, ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
முனையம் ஆயிரத்து 320 மீட்டர் நீளத்திற்கு நீட்டிக்கப்படும் என்றும் முழு முனையம் 75 ஹெக்டேர் பரப்பளவில் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
மேலும் 2024ஆம் ஆண்டு ஜூலை மாதம் நான்காம் திகதி பணிகளை பூர்த்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
உலகளாவிய ரீதியில் பிரபல்யமான துறைமுகங்களின் தரவரிசைப் பட்டியலில் இலங்கை 23ஆவது இடத்தில் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், 2035ஆம் ஆண்டை அடையும் போது கொழும்பு துறைமுகத்தை ஏராளமான கொள்கலன்களை கையாளும் பிரபல்யமான துறைமுகமாக மாற்றுவதற்கு எதிர்பார்த்திருப்பதாக அமைச்சர் ரோஹிந்த அபேகுணவர்த்தன தெரிவித்துள்ளார்.