ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது அமர்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று(செவ்வாய்கிழமை) ஆரம்பமானது.
ஜனாதிபதியினால் எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்கான அரசாங்கத்தின் கொள்கை பிரகடனம் முன்வைக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து 2022ஆம் ஆண்டின் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் கூட்டம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நாடாளுமன்ற குழு அறை 01இல் இடம்பெற்றது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கொள்கை பிரகடனம் தொடர்பிலான ஒத்திவைக்கப்பட்ட விவாதத்தினை நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய இரு தினங்கள் நடத்துவதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இடம் பெற்ற கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது.
ஆளுங்கட்சி உறுப்பினர்கள் பலர் விவாதத்தின் போது கருத்து தெரிவிக்க தயாராகவிருப்பதால் 21ஆம் திகதியும் விவாதத்திற்காக ஒதுக்குமாறு அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இதன்போது பிரதமரிடம் கோரிக்கை விடுத்தார்.
அதற்கமைய சபாநாயகருக்கு எடுத்துரைத்து 21ஆம் திகதியினையும் விவாதத்திற்காக ஒதுக்கிக் கொள்ளுமாறு பிரதமர் ஆலோசனை வழங்கினார்.
‘எண்ணெய் தாங்கிகள் மீண்டும் நாட்டிற்கு’ எனும் தொனிப்பொருளில் திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை அபிவிருத்தி செய்வது தொடர்பிலான ஒப்பந்தம் குறித்து வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெளிவுபடுத்தினார்.
குறித்த கூட்டத்தில் அமைச்சர்களான தினேஷ் குணவர்தன, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, பசில் ராஜபக்ஷ, ஜீ.எல்.பீரிஸ், நிமல் சிறிபால த சில்வா, விமல் வீரவங்ச, மஹிந்த அமரவீர உள்ளிட்ட அமைச்சரவை அமைச்சர்களும், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் ஆளுங்கட்சி உறுப்பினர்கள், ஜனாதிபதியின் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு செயலாளர் ஷானிகா கொபல்லவ, பிரதமரின் பாராளுமன்ற விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு செயலாளர் பிரியந்த ரத்நாயக்க உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.