ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், உக்ரைனுடனான முழுவீச்சிலான போரை விரும்பவில்லை என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா, உக்ரைனை ஆக்கிரமிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து அச்சம் நிலவி வருகின்ற நிலையில், பைடனின் இந்த கருத்து வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ‘உக்ரைனுக்குள் ரஷ்யா நுழையும் என்பது என் கணிப்பு. அவர் ஏதாவது செய்தாக வேண்டியிருக்கிறது.
உக்ரைனியர்களுக்கு 600 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான அதிநவீன பாதுகாப்பு உபகரணங்களை ஏற்கனவே அனுப்பியுள்ளேன்.
உக்ரைனுக்குள் ரஷ்யா மேலும் முன்னேறினால், நான் ஏற்கனவே உறுதியளித்தபடி பொருளாதார தடைகளை புடின் சந்திப்பார்’ என கூறினார்.
உக்ரைன் மீது போர் தொடுப்பதாக வெளியாகும் தகவலை ரஷ்யா தொடர்ந்து மறுத்து வருகிறது. எனினும் எல்லையோரத்தில் தொடர்ந்து படைகளைக் குவித்து வருகிறது.
உக்ரைனை நேட்டோவில் சேர்த்துக் கொள்ளக்கூடாது, போலாந்து உள்ளிட்ட நாடுகளில் நேட்டோ நடவடிக்கைகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை ரஷ்யா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இதனிடையே, உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பு நடத்தக்கூடும் என்ற அச்சம் அதிகரித்து வரும் சூழ்நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளின்கன் ஐரோப்பா விரைந்துள்ளார்.