விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்றுவரும் ஆண்டின் முதலாவது கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரில், தற்போது மூன்றாவது சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
தற்போது அந்தப் போட்டிகளின் முடிவுகளை பார்க்கலாம்,
இதன்படி ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்றுப் போட்டியில், கனடாவின் டெனிஸ் ஷபோவலோவ்வும், அமெரிக்காவின் ரெய்லி ஓபெல்காவும் பலப்பரீட்சை நடத்தினர்.
பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், டெனிஸ் ஷபோவலோவ், 7-6, 4-6, 6-3, 6-4 என்ற செட் கணக்குகளில் வெற்றிபெற்று நான்காவது சுற்றுக்கு தகுதிபெற்றார்.
ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்றுப் போட்டியில், ஜேர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரவ்வும் மோல்டோவின் ராடு ஆல்பட்டும் மோதினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், அலெக்ஸாண்டர் ஸ்வெரவ், 6-3, 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார்.
பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்றுப் போட்டியில், கிரேக்கத்தின் மரியா சக்கரி, ரஷ்யாவின் வெரோனிகா குடெர்மெடோவாவை எதிர்கொண்டார்.
எதிர்பார்ப்பு மிக்க இப்போட்டியில், மரியா சக்கரி, 6-4, 6-1 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்றுப் போட்டியில், பெலராஸின் விக்டோரியா அஸரங்காவும், உக்ரைனின் எலினா ஸ்விடோலினாவும் பலப்பரீட்சை நடத்தினர்.
இப்போட்டியில், விக்டோரியா அஸரங்கா 6-0, 6-2 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார்.