இந்தியாவின் 73ஆவது குடியரசு தினம் இன்று (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது.
இதனை முன்னிட்டு முப்படைகளின் அணிவகுப்பு, சாகசங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. காலை 10.30 மணிமுதல் நண்பகல் 12 மணிவரைக்கும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விழா ஆரம்பிக்கப்படுவதற்கு முன்பதாக தேசிய போர் நினைவிடத்தில், பிரதமர் நரேந்திர மோடி மலர் அஞ்சலி செலுத்தவுள்ளார். இதனையடுத்து விஜய் சவுக் பகுதியில் இருந்து ராஜபாதை வழியாக தேசிய மைதானத்தில் முப்படைகளின் அணிவகுப்பு நடைபெறவுள்ளது.
அதேநேரம் இராணுவ பலத்தை காட்டும் வகையில் அதிநவீன பீரங்கிகள், ஆகாஷ் ஏவுகணைகள் அணிவகுப்பில் இடம்பெறவுள்ளதோடு, நவீன போர் விமானங்கள் கொண்ட விமானப்படை சாகசமும் நடைபெறவுள்ளது.
இதேவேளை குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டின் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.